புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு அதிகாரி விளக்கம்

 

 

ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு அதிகாரி விளக்கம்

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

ஊரடங்கு உத்தரவையும் மீறி சில மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். ஒரே நேரத்தில் ஏராளமானோர் செல்வதால் அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து,  வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதை தடுத்து நிறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அவ்வாறு எல்லை தாண்டி செல்பவர்களை பிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கவும் நேற்று உத்தரவு வெளியானது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு ஒரே நேரத்தில் புறப்பட்டதால் வட மாநிலங்களில் கொரானா குறித்த பெரும் பீதி நிலவுகிறது.

இந்த சூழலில் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற அச்சமும் நாட்டு மக்களிடையே உலவி வருகிறது. இதனால் பெரிதும் கவலை அடைந்துள்ள மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, ஊரடங்கு நீடிக்கும் என்ற தகவலை மறுத்துள்ள மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, “ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை” என்றார்.

அவரின் இந்த பேச்சு நாட்டு மக்களிடையே எழுந்த அச்சத்தை போக்கும் விதமாக அமைந்தது.

791 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன