வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?!

 

மின் கட்டண ரீடிங் விவகாரம் அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?!

கொரானா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த நான்கு மாதங்களாக மின்வாரிய கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் கடந்த இரண்டு மாதங்களாக முந்தைய மாத மின்கட்டணத்தையே செலுத்தலாம் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது நான்கு மாதத்திற்கும் மொத்தமாக மின் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதால் மிக அதிகமாக மின்கட்டணம் வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதாகவும் மின்வாரியம் கொள்ளை அடிப்பதாக எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார் இதனால் மின் வாரியம் அதிர்ச்சி அடைந்து பிரசன்னாவின் வீட்டில் மீண்டும் மின் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும் அதில் தவறு இருந்தால் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது

இந்த நிலையில் தற்போது மின் வாரியம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும், நான்கு மாத மின்நுகர்வை இரண்டாக பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும் மின்வாரியம் பதில் அளித்துள்ளது. மேலும் நடிகர் பிரசன்னா மின்வாரியத்தை கடுஞ்சொற்களால் குற்றஞ்சாட்டுவது கண்டிக்கத்தக்கது என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்வாரியத்தின் இந்த பதிலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதே நேரம் நடிகர் பிரசன்னா கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்பதைப் போல தமிழகம் முழுவதும் பல இடங்களில் மின் கட்டணம் கடுமையான உயர்வை காட்டுகிறது.

இதற்கு காரணம் மின் கட்டண ரீடிங் முறையில் மின் வாரியம் வைத்துள்ள முறைகள்தான். 500 யூனிட்டுக்குள் பயன்பாடு வந்தால் வரும் தொகை 500 யூனிட்டை தாண்டி சில யூனிட்டுகள் போனாலும் கட்டணம் இரண்டு மடங்காக உயர்ந்து விடுகிறது.

இந்த சூழலில் ஏற்கனவே 4 மாதங்களாக எடுக்கப்படாத மீட்டர் ரீடிங் இப்போது எடுக்கப்படும் போது 4 மாதத்திற்கும் சேர்த்து மொத்த யூனிட் கண்டிப்பாக அதிகமாக இருக்கும். அந்த யூனிட்டில் ஏற்கனவே நமக்கு கொரானாவுக்கு முன் வந்த ரீடிங் அளவில் சின்ன வித்தியாசம் இருந்தால் பரவாயில்லை. மிக அதிகமாக இருந்தால் புகார் தெரிவிக்க வேண்டும்.

அதோடு, குறிப்பாக மீட்டர் ரீடிங் எடுக்க வரும் போது மொத்த தொகையில் நாம் ஏற்கனவே கட்டிய தொகையை கழிப்பதை விட மொத்த ரீடிங் அளவில் நாம் பயன்படுத்திய ரீடிங் அளவை கழித்து விட்டு மீதம் உள்ள ரீடிங் அளவுக்கு மட்டும் தொகை கணக்கிடச் சொல்லுங்கள்.
பல இடங்களில் மொத்த ரீடிங் அளவுக்கும் தொகை போட்டு விட்டு நாம் ஏற்கனவே கட்டிய தொகையை மட்டுமே கழிப்பதால் மின் கட்டணம் கடுமையான உயர்வை சந்தித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது மின் வாரியத்தின் பகல் கொள்ளை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

இதற்கிடையில் மின்வாரியத்தையோ, அரசையோ நான் குறை சொல்லவில்லை. ஒரு வேளை என் பதிவு அவர்களுக்கு மன வருத்தம் அளித்திருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டு பதிவு வெளியிட்டுள்ளார்.

409 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன