வியாழக்கிழமை, ஆகஸ்ட் 5
Shadow

தனியார் ஆஸ்பத்திரி கட்டண கொள்ளைக்கு துணை போகிறதா தமிழக அரசு?!

 

 

தனியார் ஆஸ்பத்திரி கட்டண கொள்ளைக்கு துணை போகிறதா தமிழக அரசு?!

கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரம் கொரானாவுக்கு சிகிச்சை அளிக்கும் அனுமதி தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது.

பிரபலமான பல தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்ட நிலையில் திடீரென ஒரு தனியார் தொலைக்காட்சியில் தமிழகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கொரானா சிகிச்சை அனுமதிக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் என்றும் நாளொன்றுக்கு ரூம் வாடகை சில லட்சங்கள் என்றும், மருத்துவ உடைக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் என்றும் வசூலிக்கப்பட்ட விவரத்தை ரகசிய கேமரா வைத்து படம் பிடித்து அம்பலப்படுத்தியது.

ஆரம்பத்தில் சிகிச்சை அளிக்க மறுத்து பயந்து ஒதுங்கிய தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் இப்போது திடீரென சிகிச்சை கட்டணமாக பல லட்சங்களை பகிரங்கமாக வசூலிப்பது சாமானிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

அதோடு, தமிழக அரசின் மருத்துவ துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் அனைத்தும் சிறப்பாக சிகிச்சை அளிக்கும் நிலையில் ஓடி ஒளிந்த தனியார் ஆஸ்பத்திரிகள் திடீரென பணம் புடுங்கும் திட்டத்தை செயல்படுத்த யார் தைரியம் கொடுத்தது.

தனியார் ஆஸ்பத்திரிகளின் கொரானா சிகிச்சை வசூலுக்கு அரசு சுகாதாரத்துறை பின்னணியில் செயல்படுகிறதோ என்று மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

இதை மெய்ப்பிக்கும் விதமாக தனியார் ஆஸ்பத்திரிகள் வசூலிக்கும் தொகையை அரசே நிர்ணயித்து உள்ளது.

இப்போது உள்ள நிலவரப்படி தமிழகத்தில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,872ஆக அதிகரித்துள்ளது. கொரானாவுக்கு 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரானாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு இந்திய மருத்துவ கழகத்தின் தமிழகப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அதுகுறித்த விவரங்களை காண்போம்…

லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்களுக்கு சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரானா பாதிப்பு லேசாக இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.23,182 வசூலிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பெறும் கொரானா நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.25,377 வீதம் 17 நாட்களுக்கு கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயித்துள்ளது.

மேலும் சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றுக்கு தினமும் ரூ.9,600 வசூலிக்கவும் இந்திய மருத்துவ கழகத்தின் தமிழகப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

அரசின் இந்த பரிந்துரை விவரம் வெளியே தெரிந்ததும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

கொரானா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் வாழ்வாதார சிக்கலில் உள்ள மக்களுக்கு அப்படியே தொற்று ஏற்பட்டாலும் அரசு ஆஸ்பத்திரி மூலமாக கண்டிப்பாக காப்பாற்றப் படுவோம் என்ற நம்பிக்கையை இந்த தனியார் ஆஸ்பத்திரி கட்டண கொள்ளை உடைத்து எறிந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் பாதிப்பு எண்ணிக்கை சொல்லும் இந்த அரசு தனியார் ஆஸ்பத்திரிகளின் கொரானா கட்டண கொள்ளைக்கு துணை போகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஆரம்பத்தில் கொரானா என்பது பணக்கார நோய் ஏழைகளுக்கு வராது என சேலத்தில் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி சொல்லும் போது உண்மையில் அடித்தட்டு மக்களின் உணர்வு நிலை தெரிந்த முதல்வர் என்று எல்லாரும் நினைத்தார்கள்.

ஆனால், இப்போது தமிழக அரசு பரிந்துரை செய்தபடி தனியார் ஆஸ்பத்திரிகள் கொரானா சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் வசூல் செய்தால் அது நிச்சயம் பணக்கார நோய்தான். இதைத்தான் சேலத்தில் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி கூறியிருக்கிறார் போல.

இந்த ஆட்சியில் இன்னும் என்னென்னவெல்லாம் பார்க்க போகிறோமோ!

 

இதற்கிடையில் அரசு மருத்துவ காப்பீடு மூலமாக தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறலாம் என்று அரசு அறிவித்து உள்ளது. இந்த உத்தரவை எத்தனை தனியார் ஆஸ்பத்திரிகள் பின்பற்ற போகிறது?!

– கோடங்கி

369 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

3 × five =