திங்கட்கிழமை, மே 13
Shadow

சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் – தூத்துகுடியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

 

மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் என புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக இன்று இரவு தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு வெண்கலத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆளுயரச் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டக் கழக அலுவகத்தில் கலைஞரின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்பை வழங்கிய மாவட்ட கழகத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கை கனிமொழிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கலைஞர் மறைவுக்கு பின்னர், அவரது திருவுருவச்சிலை முதன்முதலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைத்தோம்,

அதன் பின்னால் ஈரோட்டில் திறந்து வைத்தோம், பின்னர் காஞ்சிபுரத்தில், முரசொலி அலுவலத்தில் திறந்து வைத்தோம்.

அதன் பின்னர் தற்போது தூத்துக்குடியில் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் அவரின் சிலையை இன்று திறந்து வைத்துள்ளோம்.

கலைஞர் வழி நின்று, அவர் எந்த உணர்வோடு பாடுபட்டாரோ, பணியாற்றினாரோ, எதையெல்லாம் கற்றுத்தந்தாரோ,

அதையெல்லாம் நாங்கள் நிச்சியமாக, உறுதியாக நிறைவேற்றுவோம் என்று உறுதியேற்க கூடிய நிகழ்ச்சியாக தான் நான் கருதிக்கொண்டு இருக்கிறேன்.

பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ள உள்ளாட்சியில் மேயராக, துணை மேயராக, மாநகராட்சி உறுப்பினராக,

பேரூராட்சி உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள இன்று எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என்னவென்றால்,

அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி எடுத்துச்செல்வது உண்டு, மக்களோடு சேர், மக்களோடு சேர்ந்து பணியாற்று,

மக்களோடு மக்களாக இருந்து வாழ் என்பதை நமக்கு கற்று தந்திருக்கிறார்.

அதனை நாம் உணர்ந்து, நாம் நம்முடைய கடைமையை ஆற்ற, நாம் அத்தனை பேரும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நான் முதன்முதலாக சென்னை மாநகர மேயராக 1996ம் ஆண்டு பொறுப்பேற்ற போது, அந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஏற்புரை ஏற்பதாற்கான உரை ஒன்றை தயாரித்து, அது சரியாக இருக்கிறதா என்று கலைஞரிடம் சென்று காட்டினேன்.

அதனை முழுமையாக படித்து பார்த்து, இரண்டு இடங்களில் திருத்தம் செய்தார். அது என்னவென்றால்,

மேயர் பதவி என்று நான் போட்டிருந்தேன். அதனை திருத்தி மேயர் பொறுப்பு என்று மாற்றினார்.

மக்கள் உனக்கு தந்திருப்பது பதவியல்ல, மக்கள் உனக்கு தந்திருப்பது பொறுப்பு அதை உணர்ந்து பணியாற்று என்றார் கலைஞர்.

அதைத்தான் நான் இன்று பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் நினைவுப்படுத்துகிறேன்.

உறுதியோடு சொல்கிறேன் எங்காவது, ஒரு சிறு தவறு நடந்தால் கூட அதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பேன்.

அச்சுறுத்தலுக்காக சொல்லவில்லை, மக்கள் நம்மை நம்பி இந்த பொறுப்பை தந்துள்ளார்கள் அவர்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும் அதற்காகத்தான்

நம் கூட்டணி கட்சிகளுக்காக சில இடங்களை ஒதுக்கி அறிவித்தோம், அந்த இடங்களில் ஒரு சில தவறுகள் நடந்துள்ளது.

அந்த தவறுகள் நடந்ததால் நான் வருந்துகிறேன், வேதனைப்படுகிறேன், கூனி குறுகி நிற்கிறேன்.

அந்த தவறை செய்தவர்கள் உடனடியாக திருந்தி வரவேண்டும், உடனடியாக ராஜினாமா செய்து வர வேண்டும்,

இல்லையென்றால் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நான் சொன்னது உங்களுக்கு தெரியும்.

இதனை செய்திக்காகவோ, கூட்டணி கட்சியை திருப்தி படுத்துவதற்கோ, தவறு செய்தவர்களை மிரட்டுவதற்கோ அல்ல.

நிச்சயமாக, உறுதியாக செய்த தவறை உணர்ந்து திருந்தவில்லை என்றால்,

உரிய நடவடிக்கை எடுப்பேன் என்பதை கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ள இந்த நேரத்தில் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்

178 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன