
மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்களை தொடர்ந்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டும், தங்களது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியதால் அந்நாட்டின் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட உள்ளது.
மேலும், அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவின் பங்குச்சந்தைகள் ஐம்பது சதவீதம் சரிவைச் சந்தித்தது. ரஷ்யாவின் நாணயமான ரூபிளும் வரலாறு காணாத அளவுக்கு மதிப்பை இழந்துள்ளது.
ஆப்பிள், போயிங், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், கூகுள், டிவிட்டர், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது சேவைகளை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்கும் அமெரிக்க நிறுவனங்களான மாஸ்டர்கார்டு மற்றும் விசா ஆகியவை, ரஷ்யாவில் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
மாஸ்டர் கார்டு நிறுவனம், ரஷ்ய வங்கிகளின் செயல்பாடுகளை ஆதரிக்கப் போவதில்லை என்றும், ரஷ்ய வணிகர்கள் மற்றும் ஏடிஎம்களில் தங்களின் சேவை செயல்படாது என்றும் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவிற்கு வெளியே நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட விசா கார்டுகளும் அந்நாட்டில் வேலை செய்யாது என்று விசா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ரஷ்யாவின் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கிகள் கடன்கள் வழங்குவதை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளையில், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விற்பனையாளர்களுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதன்படி அரிசி, ரொட்டி, மாவு, முட்டை, இறைச்சி மற்றும் பால் பொருட்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே ஒருவருக்கு விற்பனை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

