வெள்ளிக்கிழமை, மே 24
Shadow

ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’.. விமானத்தில் பாகன் தம்பதியை கைதட்டி வரவேற்ற பயணிகள்!

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப்பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

நேற்று ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பொம்மன், பெள்ளி ஆகியோரும் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து மும்பை சென்றனர்.

நேற்று மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.

விழா முடிந்ததும் அவர்கள் உடனடியாக நேற்று மாலையே மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மும்பையில் இருந்து அவர்கள் கோவைக்கு இண்டிகோ விமானத்தில் வந்தனர்.

இந்த நிலையில் பொம்மன், பெள்ளி ஆகியோர் இந்த விமானத்தில் வருவது, விமானிக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் எழுந்து வந்து, உள்ளே இருந்த பயணிகளை பார்த்து, நாம் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என கூறினார்.

அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் என்ன சொல்கிறார் என தெரியாமல் குழம்பி போய் இருந்தனர்.

தொடர்ந்து விமானி பேசுகையில், நம்முடன் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தின் கலைஞர்கள் 2 பேர் பயணிக்கிறார்கள். அவர்களுடன் பயணிப்பது நமக்கு பெருமையான தருணம். அவர்களை நாம் கைதட்டி உற்சாகமாக வரவேற்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது பொம்மனும், பெள்ளியும் விமானத்தின் முதல் இருக்கையில் இருந்து எழுந்தனர். உடனே இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி 2 பேரையும் உற்சாகமாக வரவேற்றனர்.

இதை பார்த்த பொம்மன், பெள்ளி ஆகியோர் பதிலுக்கு அவர்களுக்கு கை கூப்பி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொண்டனர். அப்போது விமானி, இவர்கள் நடிகர்கள் அல்ல. உண்மையான மனிதர்கள். நிஜ ஹீரோக்கள்.

இவர்களுடன் பயணிப்பதை பெருமையாக உணர்கிறோம் என தெரிவித்தார். மேலும் கோவை வரும் வரை பொம்மன், பெள்ளியிடம் பயணிகள் அனைவரும் பேசி கொண்டு வந்தனர்.

கோவையில் விமானம் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி வரிசையாக நின்று கொண்டனர். பொம்மன், பெள்ளி விமானத்தை விட்டு இறங்கி வரும் போது வாழ்த்துக்களை கூறி வரவேற்றனர்.

அத்துடன் அவர்களுடன் செல்பி புகைப்படமும் எடுத்து அதனை தங்கள் சமூக வலைதளங்களில் ஆஸ்கர் விருது பெற்றவர்களுடன் ஒரு சந்திப்பு என தலைப்பிட்டு பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் பொம்மன், பெள்ளி ஆகியோர் கோவையில் இருந்து கார் மூலமாக நீலகிரி புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோவை சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவும் பகிர்ந்துள்ளார்.

இதேபோல் இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பொம்மன், பெள்ளி பயணித்த வீடியோவை பகிர்ந்து, அதில் எங்கள் விமானத்தில் ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் நடித்த கலைஞர்கள் பயணித்தது எங்களுக்கு பெருமையான தருணமாகும் என தெரிவித்துள்ளது.

நாங்கள் மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று விட்டு நேற்று ஊர் திரும்புவதற்காக விமானத்தில் பயணித்தோம்.

அப்போது எங்களுடன் பயணித்தவர்கள் எங்களை வெகுவாக பாராட்டினர்.

இதனை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. காட்டுக்குள் இருந்த எங்களுக்கு அங்கிருந்து வெளியில் வந்து நகர பகுதியை பார்வையிட்டதும், அங்கு மக்கள் எங்களுக்கு கொடுத்த வரவேற்பும் மிகவும் அளப்பரியது.

எங்களுக்கு கிடைத்த இந்த பெருமை எல்லாம் குட்டி யானைகளான ரகு, பொம்மியைவே சாரும். அவர்களால் தான் நாங்கள் இந்த அளவுக்கு பிரபலமாகி உள்ளோம்.

எங்களை எங்கு பார்த்தாலும் அனைவரும் அடையாளம் கண்டு பாராட்டு தெரிவிப்பதோடு எங்களுடன் புகைப்படமும் எடுத்து கொள்கின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர். ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத்தில் நடித்தாலும் அவர்கள் 2 பேரும் எவ்வித கர்வமும் இல்லாமலும், அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் சர்வ சாதாரணமாக அதனை கடந்து செல்கின்றனர்.

அத்துடன் மீண்டும் தங்கள் பணியை தொடங்கி விட்டனர். ஆம் அவர்கள் 2 பேருக்கும் தற்போது வனத்துறையினர் வேறு ஒரு குட்டி யானையை பராமரிக்கும் பணியை கொடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் தாயை பிரிந்த 4 மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் விழுந்து விட்டது.

அந்த யானை குட்டியை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் சேர்க்க எவ்வளவோ முயற்சித்தும் தாய் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் குட்டி யானையை முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அந்த குட்டி யானையை பராமரிக்கும் பணி ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த தம்பதியான பொம்மன், பெள்ளி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அந்த யானையை தங்கள் பிள்ளையை போல் பாவித்து பராமரித்து வளர்க்க தொடங்கி உள்ளனர்.

126 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன