வியாழக்கிழமை, மே 21
Shadow

திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இல்லாதது தனக்கு மன வேதனை – பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி

 

பிரபல பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழகத்தின் தற்போதைய புதிய அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் ஆட்சி குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் வெற்றியை ஒரு அதிர்ஷ்டமாகப் பார்க்கும் அவர், அவரது தற்போதைய ஆட்சி ‘குருவி தலையில் பனங்காய்’ இருப்பது போல் உள்ளதாகவும், அரசியலில் பயணிப்பது மிகவும் கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதல்வராகப் பொறுப்பேற்றதும் விஜய் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் ஏற்கனவே இருந்தவர்கள் செய்த விஷயங்கள் தான் என்றும், புதிதாக என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

விஜய்யிடம் தனக்கு கோட்-சூட் அணிவது பிடிக்கவில்லை என்றும், தமிழ்நாட்டின் பெருமையான வேஷ்டி-சட்டை அணிந்து அவர் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது கணவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இந்தியாவின் முதல் நடிகர் எம்.எல்.ஏ என்றும், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற திராவிடத் தலைவர்கள் தங்களது குடும்ப நண்பர்கள் என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இல்லாதது தனக்கு மன வேதனையை அளிப்பதாகக் கூறியுள்ள அவர், குறிப்பாக திமுக மற்றும் ஸ்டாலினின் தோல்வி தனக்குத் தலையில் இடி விழுந்தது போல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெரியார், அண்ணா கொள்கைகளை உள்வாங்கியவர்களுக்குத்தான் அரசியல் நிர்வாகம் தெரியும் என்று குறிப்பிட்ட அவர், திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு என்ன ஆகுமோ என்ற கவலை தன்னைச் சூழ்ந்துள்ளதாக உருக்கமாகப் பேசியுள்ளார்

12 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன