வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.

கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியதால் கடந்த ஆண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதலில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்கள் என்ற சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 3-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியதால் பள்ளிகளுக்கு ஜனவரி 31-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. வகுப்புகள் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன.

இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின.

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் இன்று மாணவர்கள் மிகவும் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர்.

காலை 8 மணி முதல் மாணவர்கள் அதிகளவில் பள்ளிகளுக்கு வரத்தொடங்கினார்கள். அவர்களுக்கு பள்ளி வளாகத்தில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி கொடுக்கப்பட்டது.

மேலும் மாணவர்களிடம் உங்கள் வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா? என்று ஆசிரியர்கள் கேட்டு தெரிந்து அனுப்பி வைத்தனர். கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தவாறு மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

பெற்றோர்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த முறை 50 சதவீத மாணவர்கள் என்ற சுழற்சி அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது வந்த மாணவர்கள் வெப்ப பரிசோதனை செய்தபோது ஒருவித பயத்துடனே காணப்பட்டனர். பெற்றோர்களும் அவர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை கூறி மாணவர்கள் வகுப்புக்குள் செல்வதை பயத்துடனே வெளியில் நின்று பார்த்து கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த முறை மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் எந்தவித பயமோ, பதட்டமோ தென்படவில்லை. ஆர்வமுடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டனர்.

வகுப்புகளுக்குள் சென்ற மாணவர்கள் தங்களின் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களை பார்த்து குதூகலம் அடைந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு தற்போது முழு அளவில் 100 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
145 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன